கோடை மழை!

 Author : Suganya Kannan
மழைத்துளி!
நீ சொட்டு சொட்டாய் விண்ணிலிருந்து என் கன்னத்தில் பட்டதும் உன் ஸ்பரிசத்தில் லயித்துப்போய் உன்னில் காதல்கொண்டேன்.
மின்சாரக்கம்பிகளில் உன் துளிகளின் வடிவம் ஒன்றை ஒன்று மோதி கீழே விழுகையில் புல்வெளியெல்லாம் உயிருற்றது.
பேருந்துகளின் சன்னல் கம்பிகளில் நீ பட்டு பட்டு படர்வதைக் கண்டு,
சின்ன சின்ன குழந்தைகள் உன்னோடு சேர்ந்து ஆடும் ஆட்டத்தைக் கண்டு,
வாடிப்போன செடி ஒன்று மெல்ல துளிர் விடுவதைக் கண்டு,
பயிர்களை கண்டு வாடிய விவசாயின் புன்முறுவலைக் கண்டு,
ரோட்டோரக் கடைக்காரன் குடைக்குள் ஒதுங்குவதைக் கண்டு,
சாலையோரத்தில் ஏழை, பணக்காரன் என்று பாராமல் மக்கள் ஒருமிதத்து நிற்பதைக் கண்டு,
இடிகளின் ஓசையில் சின்னஞ் சிறுகுழந்தை அன்னையின் சேலைக்குள் ஒளிவது கண்டு,
ஒரு வினாடியில் நீ செய்யும் அத்தனை அற்புதங்களையும் கண்டு மெய்சிலிர்க்க வியந்து போனேன் இயற்கையின் எழிலில் திகைத்தவளாய்!
ஆனால், இத்தனையும் இருந்தும்
மழைக்காலத்தில் வரும் பெருமழையை விட இந்த கோடைக்கால மழை மீது தான் எனக்கோ ஏன் இந்த காதல்?
Advertisement

எனக்கா சுதந்திரம் ?

Author: Preethika Balasubramani

எனக்கா சுதந்திரம் ?
அன்று வயிற்றிலேயே சிதைக்கப்பட்டவள் இன்று வெளியில் சிதைக்கப்படுகிரேனே

எனக்கா    சுதந்திரம்?

வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே
எனக்கா சுதந்திரம் ?பாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களே!
எனக்கா சுதந்திரம் ?
புத்தாடை அணிந்து அதுகசங்காமல் நடக்கும் என்னை குப்பை போல் கசக்கத்துடிக்கும் அரக்கர்களே
எனக்கா சுதந்திரம் ?
போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே பொசுங்கியிருப்பேன் !!தப்பித்து வெளிவந்தேன் என்று மார்தட்டினேன் தட்டிய மறுநொடி மாரை காணவில்லை. !!
என் உடலோடு சேர்த்து உயிரையும் சிதைத்துவிட்டான் !
நான் அண்ணா என்று அழைத்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாத மூடன் ஒருவன்!

– (Justice For _____ )

 

தனி மனிதனின் ஓலம்!

Author : Suganya Kannan

கணவனும் மனைவியும் தங்களின் காதலின் வெளிப்பாடாய் கலவியும் கொண்டு ஒரு பூச்சியும் உருவானது அவள் வயிற்றினிலே!
பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு “என் அம்மாளு” என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான்!
ஒரு வயதில் நடைவண்டி,
மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம்,
என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான்.
வருடங்கள் ஓட,
ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் “நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க!” என்று கணவனிடம் கூறுகையில்,
கண்களில் ஆனந்தத்தையும் நெஞ்சில் பயத்தையும் சுமந்தவனாய் தன் மகளின் நெற்றியில் முத்தமிடுகிறான்.
ஆசையாய்ப் பெற்ற மகளை நன்கு படிக்கவேண்டும்,பெரிய பதவியில் யாருக்கும் அடிமை இல்லாமல் வாழவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தவன்,
நாளிதழில் தினம் ஒரு செய்தியாய் வந்துச் செல்லும் பெண்களுக்கு      நடக்கும் கொடூரத்தைப் பார்த்ததும்,
அம்மா நீ படித்தது போதும், உனக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளேன், திருமணம் செய்துகொள்” என்று கூறுகிறான் சற்றே தயக்கத்துடன்!
சிறுவயதில் இருந்து பற்பல ஆசை, லட்சியம் என்று அப்பா உரைத்த சொல்லுக்கு அப்படியே கட்டுப்பட்ட மகளோ இன்று பகுத்தறிந்தவளாய் ஏன் என வினவுகிறாள்?
அதற்குத் தகப்பனிடம் பதில் ஒன்றும் பெரிதாய் இல்லை.

இறுதியில் ஒரு மகவைப் பெற்று அவளை அலங்கரித்து படிக்கவைத்து, அதிகாரம் செய்யும் தோரணையைப் பார்க்க எண்ணிய தகப்பனோ,

சமையல் அறையில் கணவனுக்கு சமைத்து விட்டு, “அவருக்கு இன்னைக்கு சமையல் பிடிக்குமோ பிடிக்காதோ?” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த தன் தவப்புதல்வியைக் கண்டு தொண்டையில் முள் சிக்கியவனாய், எச்சிலை விழுங்கியபடி மகளின் வீட்டை விட்டு நகர்ந்தான்.

பெண் விடுதலை, பெண் உரிமை, ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் எத்தனை முறை கூச்சலிட்டாலும்

தமிழா! உன் சமுதாயம் மரபு என்ற பெயரில் செய்யும் அநீதி அழிவில்லாமல் தொடர்கிறது சில கயவர்கள் செய்யும் வன்கொடுமைகளால்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

– இப்படிக்கு ஒன்றும் செய்யமுடியாதவளாய்  சுகன்யா.அ.க.