தாய்மை!

Author : AK Suganya Dinesh

மழைக் காலத்தில் குஞ்சுகளின் பசி தீர்க்க காக்கை, உணவை தேடி அலைவதும்;
முட்டைகளை எவரேனும் தீண்ட விடாது கோழி, இருபத்தொருநாள் அடைகாப்பதும்;
ஈன்ற கன்று பால் குடித்த பிறகே பசு, மானுடனின் கை மடி தீண்ட அனுமதிப்பதும்;
பெண்! தன் பசி பற்றி ஒரு நாளும் எண்ணாது, குழந்தைக்குப் பசிப்பதற்கு முன்பே சமைத்து, பின் உண்பதும்;
தாய்மை என்றால்,
வயது முதிர்ந்த பிச்சைக்காரன் தன் தட்டில் விழுந்த ரொட்டித் துண்டில் பாதியை நாய்க்குத் தானம் செய்வதும் தாய்மை அன்றோ!
பெற்ற தாயை மட்டுமல்லாது பிற உள்ளங்களின் தாய்மை உணர்வையும் போற்றுவோம்! மகத்தான வாழ்வு வாழ்வோம்!
– இப்படிக்கு
சுகன்யா தினேஷ்

 

Advertisement

சுதந்திரம் ஒரு கேள்வியே!

Author : AK Suganya Dinesh

சுதந்திரம்!
இந்த பாரதத்தில் நாம் வாழும் வாழ்க்கைக்கு மட்டுமல்ல!
சொல்லும் சொல்லுக்கும்,
செய்யும் செயலுக்கும்;
அநீதிக்கு எதிரான கருத்திற்கும்,
படிப்பிற்கும் பண்பிற்கும்
உரியது.
ஆனால், இச்சுதந்திரம் அவற்றிக்குச் சரியாகப் பயன்படுகிறதா என்றால் சற்றே தயக்கம் தான்!
அன்று நம் முன்னோர்கள் பெற்று தந்த
படிப்புரிமை இன்று,
சட்டத்தின் ஓட்டைகளை கண்டறிந்து
பெண்களை சூறையாடுவதற்கும்,
கருத்து சுதந்திரம் என்ற பெயரில், செய்யும் பிழைகளையெல்லாம் செய்துவிட்டு சமூகத்தின் மேல் பழி போடவும்,
பண்பு என்ற பெயரில், பலர் நம் நாட்டின் பண்பையே மறந்து, பெற்ற தாயை வீதியிலும், வீதியில் உள்ள ஜீவராசிகளை வீட்டிற்குள்ளும் வாழ வழி செய்வதற்கும்,
தனிமனித சந்தோஷம் என்ற பெயரில் சிலர், கட்டிய மனைவிக்கும், பெற்ற பிள்ளைக்கும், வித்தியாசம் பாராமல் இருப்பதற்கும் பயன்பட்டு விட்டதோ என்று அச்சம் எழுகிறது.
இந்த கோரச் சம்பவங்கள் அனைத்தும் செய்தியாய் என் செவிகளில் விழுகையில் என் தாய் திருநாடு வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரம் இன்று சுயநலவாதிகளிடம் முடங்கிவிட்டதோ? என்ற மிகப்பெரிய கேள்வி பதில் தெரியாமல் தவிக்கிறது குழப்பத்தில்!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

-சுகன்யா அ க

வெற்றிடம்!

அந்தி சாய்ந்தது; சூரியக் கதிர்கள் சுருங்கத் தொடங்கின! தென்றல் காற்று மெல்ல வந்து சன்னல் கம்பிகளில் எட்டிப்பார்த்தன! பறவைகள் தன் கூட்டைத் தேடி பறக்கத் தொடங்கின! மனிதர்களின் பரபரப்பு மிகுந்த வாகனங்களின் சப்தமும் சற்றே அடங்கத் தொடங்கின! தொழிற்சாலையில் வரும் ஒலிகள் போய் ஒவ்வொரு வீட்டிலும் ஒளிவீசத் தொடங்கின! பள்ளி மணியோசை அடங்கி, கோவில் மணியோசை கேட்கத் தொடங்கின! சிறுவர்கள் ஆசிரியர்களிடமிருந்து விடுபட்டு அன்னையின் அரவணைப்பில் துயிலத் தொடங்கினர்! ஆனால், அவள் மட்டும் தன் மெல்லிய கன்னத்தில் தென்றலைப் படரவிட்டு, கூந்தலை வருடிக் கொண்டே , அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள் தன் உள்ளத்தின் வெற்றிடத்தைப் போக்க…

-அ க சுகன்யா

மீளமுடியாமல்…

நெருப்பை ஜோதி என்று நினைத்து அள்ளிக் கொண்டேன், நான் காகிதக் கப்பல் என்பதையும் மறந்து!
இறுதியில் கருகியது நான் மட்டுமல்ல, என்னைப் படைத்தவனின் கற்பனையும் தான்!

                                                    – சுகன்யா அ.க.

பணம் என்னும் நெருப்பு!

Author: AK Suganya Dinesh

பணமே!

உன்னால் எத்தனை சூழ்ச்சிகள்! எத்தனை வீழ்ச்சிகள்! நீ விழுங்கிய உடல்கள் எத்தனையோ?

நீ ஏழையின்  பகையாய் இருப்பதால் அவன் வறுமை  என்னும்  நெருப்பில் வேகிறான்;

நீ செல்வந்தனின்  நண்பனாய் இருப்பதால் அவன்  ஆணவம் என்னும்  தீயில் எரிகிறான்.

நீ மருத்துவரின் கையில்  இருப்பதால் அவன் புதுப்புது நோய்களை தருகிறான்;

நீ சாமானியனின் கையில் இருப்பதால் அவன் ஆசை என்னும் தீயில் எறிகிறான்.

நீ வாலிபனின் கையில் இருப்பதால் அவன் உழைப்பு என்னும் மந்திரத்தை மறக்கிறான்;

நீ கிழவனின் கையில் இருப்பதால் அவன் மது என்னும் விஷத்தை குடிக்கிறான்.

நீ பெற்றவளின் கையில் இருப்பதால் அவள் புவியில் பிள்ளைக்கு சொர்க்கத்தை காட்டுகிறாள்;

நீ பிள்ளையின் கையில்  இருப்பதால் அவன் இல்லத்தில் அன்னைக்கு நரகத்தை காட்டுகிறான்.

பணமே! இன்னும் எத்தனை மாயங்கள் தான் உன் கைகளிலே…

சித்தர்கள் பலர் செவியறைந்த போதும் இத்தனை மாயங்கள்  நிறைந்த இந்த நெருப்பில் வீழ இன்னும் எத்தனை மயக்கங்கள் தான் என் கண்களிலே!!!